Friday, August 17, 2012

கடவுள் வாழ்த்து - 6

குறள்:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
பொருள்:
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க நெறியை பின்பற்றி நின்றவர் நெடுங்காலம் நலமுடன் வாழ்வார்

ஞானேந்திரியங்கள்:
மெய்(உடம்பு) காற்றின் அம்சமாதலால் குளிர்ச்சி,வெப்பம்,மென்மை,வன்மை அறியும்

வாய்(நாக்கு) நீரின் அம்சமாதலால் உப்பு,புளிப்பு.இனிப்பு,கைப்பு,கார்ப்பு,துவர்ப்பு என அறுசுவையறியும்

கண் நெருப்பின் அம்சமாதலால் நிறம்,நீளம் உயரம்,குட்டை,பருமன்,மெலிவு என பத்து தன்மையறியும்

மூக்கு மண்ணின் அம்சமாதலால் வாசனை அறியும்

செவி வானின் அம்சமாதலால் ஓசையறியும்

 ஐம்புல ஆசைகளையும் ஒழித்தவன் கடவுள் எனப் போற்றப்படுகிறான். அத்தகு இறைவன் வகுத்த வாழ்க்கை நெறி வழியே (ஒழுக்க நெறியில்) தனது வாழ்க்கையினை நடத்துபவர் பிறப்பு இறப்பு இன்றி நீடுழி காலம் வாழ்வார்.

இதையேதான் வேதமும், பகவத் கீதையும் சொல்லுகிறது. வேதமும், கீதையும் குறளுக்கு முற்பட்டது என்பதால் திருவள்ளுவர் வேதவித்தகர் என்பதும் வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதனை எளிய இனிய தமிழில், சுருங்கக் கூறி விளங்க வைக்க முற்பட்டு அதனில் வெற்றியும் கொண்டுள்ளார் எனவும் கொள்ளலாம்.

வேதம், இறைவன் இதையெல்லாம் நம்பாதவர்கள் எனத் தங்களை உலகுக்கு விளம்பரம் செய்து கொண்டிருப்பவர்கள் கூட, குறளைத் தமிழ் மறை எனப் பேச வைத்ததும் சிறப்பான ஒன்றுதானே!

இந்த “பொறிவாயில் ஐந்தவித்தான்” என்றதன் விளக்கத்தை, அடக்கமுடமை எனும் மற்றொரு அதிகாரத்தில், புலனடக்கத்தின் சிறப்பு பற்றிக் கூறும் திருவள்ளுவர்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து

– என்கிறார்

இதற்குப் பொருள் “ஒருவன் ஒரு பிறப்பில், ஐம்பொறிகளையும் அடக்க வல்லானாயின் அவ்வண்மை அவனுக்கு ஏழு பிறப்பிலும் நன்மையினைத் தரும்” என்பதாகும்.

இதே கருத்து கீதையில் ஸாங்க்யயோகத்தில், 55 முதல் 58 வரியிலான ஸ்லோகங்களில், “ஸ்திதப்ரக்ஞர்” என்பவரின் குணாதிசயங்களாகக் குறிப்பிடப்படுகிறது.

“எப்படி ஆமை தனது நான்கு கால்களையும், கழுத்தையும் வாலையும் தனது முதுகு ஓட்டுக்குள் ஒடுங்குமாறு உள்ளடக்கிக் கொண்டு கிடப்பதால் எதிரிகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறதோ அது போல கர்மயோகியான ஸ்திதபிரக்ஞரும் தம் ஐம்புலன்களையும் மனத்தையும் பௌதீக விஷயத்திலிருந்து விலக்கி, தம் உள்ளுணர்வில் அடக்கிக் கொள்ளுகிறார். அந்நிலையில் அவருடைய அறிவு சமநிலையில் திடமாக இருக்கிறது.” - 58

இங்கு “பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார்” என்ற சொற்றொடர்கள் கவனிக்கத்தக்கது.

புலன்களின் மூலம் போகப் பொருட்களை ஏற்றுக் கொள்ளாத மனிதனுடைய புலன்நுகர் பொருட்கள்தான் விலகுகின்றன. ஆனால் அவற்றில் தங்கியுள்ள பற்றுகள் விலகுவதில்லை. இந்த மனிதனில் புலனடக்கம் பொய்யானது.

இதன் கருத்து எப்படி ஆமை மரணபயத்தால் தனது உறுப்புக்களைத் தனது ஓட்டினுள் அடக்கிக் கொள்ளுகிறதோ, அதே போல மனிதனும் நோய், பிடிவாதம், அச்சம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் புலனடக்கம் மேர்கொண்டு எதோ ஒன்றையோ அல்லது பல போகங்களையோ விலக்கிக் கொள்ள வற்புறுத்தப்படுகிறான். மேலும் பலவிதமான சித்திகளை அடைய தவம் அல்லது தியானத்தில் இருக்கும் பொழுதும் புலனடக்கம் மேற்கொள்ளலாம். இவையெல்லாம் தாற்காலிகமானதுதான்.

உண்மையிலேயே அவனுக்கு அப்பொருட்களின் பேரிலுள்ள பற்று ஒழிவதில்லை. புலன் துடிப்புகள் போகப் பொருட்களின்பால் ஓடிக் கொண்டுதானிருக்கின்றன. புலனடக்கம் இல்லாத மனிதர் அப்புலன் அநுபவங்களுக்கு இலக்காகி உழலும் சாமானியர்களாக, பரமாத்வாவுடன் இணையும் சாதனையில் ஈடுபடாது, மதிமயங்கி மோகநித்திரையில் ஆழ்ந்திருப்பர். ஆனால் ஞானிகள் ஆத்மலயிப்பில் அமைதியுடன் ஈடுபட்டு பரமாத்ம தத்துவத்தினை அறிவதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுவர். இதுவே “நிர்வாண பிரும்மம்” எனும் நிலையாகும். இதையேதான் திருவள்ளுவரும் தனது குறள் மூலம் கூறுகிறார்.

ஸ்திதப்ரக்ஞனாக விரும்புகிறவன் முதலில் பற்றை அறவே ஒழிக்க வேண்டும். பிறகு எல்லாப் புலன்களையும் தம் வசத்தில் வைத்திருக்கத் தீவிர முயற்சி செய்ய வேண்டும். இறைவனே கதியென்று மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானத்தில் அமர்ந்தால், அவன் விரைவிலேயே பரமாத்வாவை அடைவான் என்கிறது கீதை. இறைவன் (பரமாத்மா) தரிசனம் கிடைத்தபின் எல்லாவிதமான வருத்தமும் தரக்கூடிய அறியாமை அல்லது அஞ்ஞானம் (அவித்யை) அகன்றுவிட, மனிதன் சமபுத்தி-சமநிலை சாதகனாகிறான் (ஸ்திதப்ரக்ஞனாகிறான்). ஸ்திதப்ரக்ஞனுக்கோ பரமாத்மாவை தரிசித்த பிறகு அப்பற்றும் விலகிவிடுகிறது; பரமாத்மாவும் தானும் ஒன்றென உணர்கிறான்

"அனைத்தின் உள்ளும் புறமும் பிரம்மமே விளங்குகிறது. உலகும் புறப்பொருளும் இதன் பன்மைத் தன்மை எல்லாம் பிரம்மத்தின் விளக்கங்களே. எதுவும் மாயை இல்லை" எனப் பரமாத்வைதம் என்ற நெறி அகம்-பிரமாஸ்மி என்பதாகும்.

Reference: http://www.mazhalaigal.com

No comments:

Post a Comment