Monday, June 4, 2012

கடவுள் வாழ்த்து - 4

குறள்:

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
பொருள்:

(வேண்டுதல் = விருப்பம், வேண்டாமை = வெறுப்பு, அடி = கால்,
யாண்டும் = எப்பொழுதும், இடும்பை = துன்பம், இல = இல்லை)

தனக்குரிய துன்பங்களை நீக்குவதற்கு யாரை அணுகுவது? யாரை வணங்குவது? இறைவனை.

அந்த இறைவன் எத்தகையவன் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறார் வள்ளுவர். விருப்பு உடையவன் வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவான். வெறுப்பு உடையவன் வேண்டாதவர்களைப் பழிவாங்குவான். அவன் மனிதன். ஆனால் இந்த இரண்டும் இல்லாதவன் இறைவன். எனவே அவனிடம் நம் குறைகளை - துன்பங்களை முறையிட்டால் விருப்பு வெறுப்பு இல்லாத நிலையில் நமக்கு நன்மை விளைவிப்பான் இறைவன் என்று இறைமைக்கு விளக்கம் தருகிறார் வள்ளுவர்.

 கதை: நம்பிக்கையின் சிறப்பு.

ஒரு ஊரில் ஒரு பண்டிதர் வாழ்ந்து வ்ந்தார்.அவர்  பெரும்   கல்விமானாக இருந்தார்.சமஸ்கிருத மொழியில் மிகவும் பண்டிதராக விளங்கினார். தினமும் ஊரிலுள்ள மக்களுக்கு   பாகவதக் கதைகளைச் சொல்லி வ்ந்தார்.

அவ்வூரிலுள்ள மக்களும் இவர் சொல்லும் கதைகளைப  பிரியமாகக் கேட்டு வந்தனர்.

அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தும் மக்கள் இவரைக்  கதை கூறும்படி தங்கள் ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

ஒரு நாள் இவர் கதை சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு திருடன் திருடுவதற்காக உள்ளே நுழைந்தான். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கவே கூட்டத்தோடு சேர்ந்து அமர்ந்து கொண்டான்.

அன்று பாகவதம் பத்தாவது சர்க்கம். கிருஷ்ண லீலை பற்றியும் கிருஷ்ணரின் அழகை வர்ணித்தும் கதை கூறினார். அந்தக் கதையில் மெய்மறந்து அமர்ந்திருந்தான் திருடன். கதை முடிந்து கூட்டமும் கலைந்தது. பண்டிதரும் தனக்குக் கிடைத்த தட்சணைப் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார். சற்றுத  தொலைவு நடந்தவுடன் திருடன் அவரைப் பின் தொடர்ந்தான்.அவரிடம் இருந்த பணத்தைத் திருட எண்ணி அவர் முன் சென்று அவரை வழி மறித்தான். அச்சத்துடன் தன் பணத்தைக்  கெட்டியாகப் பிடித்துக் கொண்ட பண்டிதர் "ஏனப்பா. நான் ஏழை என்னிடம் இருக்கும் சிறு தொகையால் உனக்கு எந்தப் பயனும் இல்லை. பணக்காரராகப் பார்த்துப் போயேன்."என்றார் நடுங்கியபடியே. திருடன் சிந்தித்தான்."அப்படியானால் நீ கதையில் சொன்னாயே, அந்த ராஜகுமாரன், அவன் எங்கிருக்கிறான் சொல்.அவனிடம் அவன் அணிந்திருப்பதாக நீ சொன்ன நகைகளைக் களவாடிக் கொள்கிறேன்"என்றான்.

பண்டிதர் சிந்தித்தார்.கதையிலே தான் சொன்ன கிருஷ்ணனின் அலங்காரத்தைப் பற்றித்தான் இவன் கேட்கிறான் என்று புரிந்து கொண்டார்.கண்களை மூடி கண்ணனை வேண்டிக்கொண்டார்."கண்ணா, ஆபத்திலிருந்து நான் தப்பிக்க உன் பெயரைக் கூறுகிறேன்.

அருள்செய் கண்ணா"என்று வேண்டிக்கொண்டு.திருடனைப் பார்த்துச் சொன்னார்.

"ஆமப்பா, அந்த ராஜகுமாரன் இந்த ஊருக்கு வடக்கே ஐந்து கல் தொலைவில் உள்ள காட்டுப் பகுதிக்கு மாடுகளை மேய்த்துக் கொண்டு வருவான்.அங்கே ஒரு பாறை இருக்கும் அருகே ஒரு புன்னைமரமும் இருக்கும்.அங்குதான் மாடுகளை மேய விடுவான்."

"சரி அவன் வருகிறான் என்று நான் எப்படித் தெரிந்து கொள்வது?"

"அவன் வரும்போதே சுற்றிலும் மணம் வீசும் புல்லாங்குழலின் ஓசை கேட்கும். அப்போது அவன் வருகிறான் என்று நீ தெரிந்துகொள். சமயம் பார்த்து அவன் நகைகளைக் களவாடிக் கொள்."என்று சொன்னதைக் கேட்டு திருடன் மனம் மாறினான்.

"அப்படியானால் சரி.அவனிடம் நிறைய நகைகள் நீ சொன்னபடி கிடைத்தால் உனக்கும் பங்கு தருகிறேன்.இல்லையேல் மீண்டும் உன்னைத் தேடி நான் வருவேன்.நீ போகலாம் "

பண்டிதர் திருடன் நம்மைத் தேடி மீண்டும் வருவதற்குள் நாம் வேறு ஊருக்குப்போய் விடலாம் என்று என்ணிக் கொண்டே வேகமாக அங்கிருந்து நடந்தார்.
திருடனும் வடதிசையில்  பண்டிதர் சொன்ன இடத்தை அடைந்தான்.அவன் மனம் முழுவதும் அந்தச் சிறுவனின் தோற்றமே நிறைந்திருந்தது.அந்த ராஜகுமாரன் எப்போது வருவான் என்று ஆவலே வடிவாய் புதர் மறைவில் ஒளிந்திருந்தான்.

அதிகாலை நேரம் சற்றும் தளராமல் கண்ணனையே  எண்ணி அவன் எப்போது வருவான் எப்போது வருவான் என திசையெங்கும் சுற்றிப் பார்த்து அமர்ந்திருந்தான் அந்தத் திருடன். பசி தாகம் தூக்கம் எதையும் அவன் லட்சியம் செய்யவில்லை.வெள்ளி முளைத்தது. புள்ளினங்கள் கூவத் தொடங்கின. "என்ன இன்னும் அந்தச் சிறுவனைக் காணோமே" என்று ஏங்க ஆரம்பித்தான் திருடன்.

திடீரென்று அவன் மூக்கு நல்ல மணத்தை நுகர்ந்தது. மெல்லிய குழலோசையும் கேட்கவே அருகே இருந்த மரத்தின் மேல் ஏறி தொலைவில் பார்த்தான். அழகே வடிவாக உடம்பு நிறைய நகைகளுடன் அந்தக் கண்ணன் தெரிந்தான். வேக வேகமாக மரத்தைவிட்டு இறங்கி புதரில் மறைந்து கொண்டான்.
மாடுகளை மேயவிட்டு குழல் ஊதி யபடி புன்னை மரத்தடியில் அமர்ந்தான் அந்த ராஜகுமாரன்.

உடனே அவன் முன் தோன்றிய திருடன் அவன் முன் சென்று "ஏய் சிறுவனே உன் நகைகளைக் கொடுத்துவிடு.இல்லையேல்..."என்று மிரட்டினான்.
"வேண்டுமானால் நீயே கழற்றிக் கொள்"என்றான் கண்ணன் புன்னகையுடன்.

திருடன் வேகமாக நகைகளைக் கழற்றத் தொடங்கினான்.ஆனால்கண்ணனின்  உடலைத் தொட்டவுடன் மின்சாரம் பாய்ந்ததுபோல் உணர்ந்தான். உள்ளமும் உடலும் பரவச நிலையை அடைந்ததை உணர்ந்தான்.

அவன் முன் நின்று கூர்ந்து பார்த்தான்."நீ யாரென்று தெரியவில்லை ஆனால் உன் நகைகளைக் கழற்ற மனம் வரவில்லை. உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது. தினமும் இதே  நேரம் வந்து நான் உன்னைப் பார்ப்பேன். நீயும் வரவேண்டும். உன் நகைகளைக் காணவில்லை என்றால்   உன் பெற்றோர் உன்னைக் கோபிப்பார்கள். வேண்டாம் "என்று கண்ணனின் முன்  அமர்ந்து அவனையே பார்க்கத தொடங்கினான் திருடன்.

"பரவாயில்லை எடுத்துக் கொள்.எங்களிடம் இன்னும் நிறைய நகைகள் உள்ளன. நாளைக்கும் தருகிறேன் "என்றபடி நகைகளைக் கொடுத்தான்.

பதில் சொல்லத் தோன்றாமல் தன்னிலை மறந்து அவைகளைப் பெற்றுக் கொண்டு ஊருக்குள் ஓடி வந்தான் அந்தத் திருடன்.

நேராக பண்டிதர் வீட்டை அடைந்தான்.அவரிடம் கண்ணன் நகைகள் கொடுத்ததைக் கூறி நகைகளைக் காட்டினான்.பண்டிதரால் நம்பமுடியவில்லை. ஆனால் நகைகளைப் பார்த்து நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

"அந்தச் சிறுவன் எங்கே இருக்கிறான் காட்டு" என்றபடி அவனுடன் ஓடினார் பண்டிதர். அதே மரத்தடியில் அமர்ந்து குழலிசைத்துக் கொண்டிருந்தான் கண்ணன்.

"அதோ பாருங்கள்."திருடன் காட்டிய திசையில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை.

"அய்யோ என் கண்ணுக்கு நீ தெரியவில்லையே கண்ணா மணிவண்ணா இந்தப் பாமரன் செய்த புண்ணியம் நான் செய்யவில்லையா. உன்னையே சதாகாலமும் ஜபித்துக் கொண்டிருக்கும் எனக்கு தரிசனம் கொடு." பண்டிதர் அழத் தொடங்கினார். கண்ணன் புன்னகையோடு நின்றிருந்தான்.

திருடனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.கண்ணன் அவன் கையைப் பற்றினான்.திருடனின் அஞ்ஞானம் விலகியது. உடல் புல்லரிக்க கண்களில் நீர் மல்க கண்ணனின் பாதத்தில் வீழ்ந்தான்.

"ஐயா, பண்டிதரால்தான் உன் தரிசனம் எனக்குக் கிடைத்தது. அவருக்கும் உன் திவ்ய தரிசனத்தைக் காட்டு." என்று வேண்டிக் கொண்டான்.

"அப்படியானால் அவரது கையை நீ பற்றிக் கொள்."என்றான் கண்ணன். பண்டிதரின் கையைப் பற்றிக் கொண்டான் திருடன்.
நீலமேக வண்ணனாக அலங்கார சொரூபனாக அருள் பொங்கும் முகத்துடன் காட்சி கொடுத்தான் கண்ணன். அவர் உள்ளத்தில் தோன்றிய சந்தேகத்தைப் புரிந்து கொண்டு பேசினான் கண்ணன்.

"பண்டிதரே. உங்களுக்கு  பாண்டித்தியம் இருக்கிறது ஆனால் பக்தி இல்லை. ஆனால் திருட வந்தாலும் நம்பிக்கையும் என்னைக் காணவேண்டும் என்ற ஆசையும் கொண்டு காத்திருந்த இந்தப் பாமரனே உம்மை விட மேலானவன்.  இந்த நம்பிக்கை உம்மிடம் இல்லாததுதான் என் தரிசனம் உமக்குக் கிட்டத் தாமதமாயிற்று." என்று கூறி இருவருக்கும் ஆசி கூறி மறைந்தான் கண்ணன்.

திருடனும் தன் திருட்டுத் தொழிலைவிட்டுபண்டிதரையே தனகுருவாகக கொண்டான். இருவரும் இறைவனின் தொண்டு செய்து   இனிதே வாழ்ந்தனர்.

கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை

Sunday, June 3, 2012

கடவுள் வாழ்த்து - 3

குறள்:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
பொருள்:
மலர்போன்று மனதுக்குள் நிறைந்தவனான இறைவனின் காலடியில் அவனே கதி என்று சரணடைந்தோரின் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும்.

 கதை:
களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.

இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. “பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.

இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், “இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா…’ என்றார்.

மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.

“அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய் விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா…’ என்றான்.

பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா?

அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை வந்தது…

“இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்…’ என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான்.

அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார். தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.


அவரிடம், “விநாயகா! எப் படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப் பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்…’ என்றார் நம்பி.

அவனுக்கு அனைத்து ஞானத் தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர்.

மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர் கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர் சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.

அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டான்.

அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.

Saturday, June 2, 2012

கடவுள் வாழ்த்து - 2


குறள்:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

பொருள்:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவன் கற்றிருந்தாலும் அதனால் பயன் ஒன்றுமில்லை.

வாலறிவன் - என்ற சொல்லுக்கு மெய்யுணர்ந்த இறைவன் (ஞானி) என்ற பொருளும் உண்டு. நிறைய கற்றவர் கடவுளுக்கு ஒப்பாக போற்றப்படுவர். ஆகையால் அவரை வணங்குதல், கடவுளை வணங்குவதற்கு சமம்

கதை:
ஒரு மாணவன் அனைத்து விதமான சண்டைகளையும்/தற்காப்பு களையும் தெரிந்த குருவிடம் பாடம் பயில சென்றானாம். குருவும் தனக்கு தெரிந்த அத்தனை வித்தைகளையும் கற்றுக்கொடுத்துள்ளார்.

நாட்டில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் (சண்டை சம்மந்தமான) வெற்றியும் பெற்றானாம். ஒரு நாள் தன்னுடைய குருவே போட்டிக்கு அழைத்தானாம். (இதைத்தான் வள்ளுவர் கூடாது என்கிறார்)

குரு மனம் கலங்கி வீட்டில் உட்காந்திருக்கிறார்.

அவருடைய மனைவி: ஏன் இப்படி கவலையுடன் உள்ளீர்கள்?

குரு: நான் எனக்கு தெரிந்த அனைத்து வித்தைகளையும் கற்றுக்கொடுத்துவிட்டேன், என் மாணவனோ இளைஞன், எனக்கோ வயதாகி விட்டது என்னால் அவனை வெற்றிபெற முடியாது என்றார்.

அவருடைய மனைவி:  கையில் ஒரு கரண்டியை கொடுத்து இப்போது போங்கள், அந்த மாணவனை தைரியமாக சண்டைக்கு கூப்பிடுங்கள் என்றாராம். குருவும் அவ்வாறே செய்தாராம்.

சண்டைகளத்தில்: குரு தன்னுடைய மாணவனை பார்த்து சொன்னாராம், நான் எனக்கு தெரிந்த அனைத்து வித்தைகளையும் கற்றுக்கொடுத்துவிட்டேன், ஆனால் இந்த வித்தையை மற்றும் கற்று கொடுக்கவில்லை என்றார் (உண்மையில் அவருக்கு கரண்டியை வைத்து எந்த சண்டையும் தெரியாது, தன்னுடைய மாணவனின் கர்வத்தை நீக்கவே இந்த ஏற்பாடு)

மாணவன்: அய்யா என்னை மன்னித்து விடுங்கள். எல்லாம் கற்றுவிட்டேன் என்ற இறுமாப்பு என் கண்ணை மறைத்து விட்டது. என்னுடைய குருவே நான் சண்டைக்கு அழைத்தது பெரும் தவறு என்று காலில் விழுந்துவிட்டான்.

Friday, June 1, 2012

கடவுள் வாழ்த்து - 1

குறள்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள்:
'எழுத்துக்களுக்கெல்லாம் 'அ' முதலானதாயிருப்பதுபோல உலகுக்கு இறைவன் முதல்வனாக இருக்கிறான்.'

"அகரம்" என்றால் புள்ளி என்று பொருள்.எல்லா எழுத்துக்களும் புள்ளியை முதலாக கொண்டே எழுகின்றன.வரிவடிவங்களுக்கு முதலெழுத்து புள்ளி.(புறத்தில்).  எழுத்துக்கள் இல்லாத மொழிகளும் புள்ளியையே ஆதாரமாக கொண்டே எழுகிறது. எவ்வாறெனில் வாயிலிருந்து வார்த்தையாய் வெளிவருவதற்கு முன் அது எண்ணமாய் இருந்தது.
எண்ணம் நினைவு என்ற புள்ளியிலிருந்து தோன்றுகின்றது. இந்த நினைவே அகரம் என்றழைக்கப்படுகிறது.(அகத்தில்)

(அகர முதல=அகர ம்+உதல,உதலம்=உலகம்)
அகரம் என்றால் நினைவு.உதலம் என்றால் உலகம்.

நான் உள்ளவரை உலகம் உண்டு.உலகம் உள்ளவரை நான் உண்டு. என்னையும் உலகத்தையும் பிணைக்கின்ற சக்தி ஒன்றும் உண்டு.அதுவே ஆதி. இந்த ஆதியை முதலாக கொண்டே உலகமும் நானும்.

அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்.

கதை:
மனிதக் குரங்குகள் குரங்கு மனிதர்களாய் வாழ்ந்த காலமது.

மலைஅடிவாரத்தில், குகைகளுக்குள், மிருகத்தோலாடைகளுடன் வாழ்ந்துவந்தனர் அவர்கள். சைகையும் ஒலிகளும் நிறைந்த மொழி ஒன்றைப் பேசினர். இயற்கைக்கு அஞ்சி நடுங்கினர். குழுவாக வேட்டையாடி கிடைப்பதை ஒன்றாய் பகிர்ந்தனர்.

வயதானப் பெண் ஒருத்தி ஒருநாள் இந்தக் கூட்டத்தைவிட்டுப் பிரிந்தாள். நெடுந்தூரம் நடந்தாள். மலையின் உச்சியை அடைந்து இயற்கையை கவனிக்கத் துவங்கினாள்.
வானின் நட்சத்திரங்களைக் கணக்கெடுத்தாள். பூமியின் சுழற்சியை கண்டுகொண்டாள். செடிகொடி வளர்ப்பதை தெரிந்துகொண்டாள். தீயை உருவாக்கி கட்டுக்குள் வைத்திருக்கப் பழகினாள். கோள்களின் பாதையைப் புரிந்துகொண்டாள். காட்டில் விளைபவைகளில் விஷத்தையும் உணவையும் பிரித்தறியும் அபூர்வ உணர்வு அவளுக்கிருந்தது. பல ஆண்டுகள் கழித்து இயற்கைபற்றிய பயம் நீங்கியவளாய் மலையிலிருந்து கீழிறங்கினாள்.

தொலைந்துபோனவள் திரும்ப வருவதை வேடிக்கையாய் பார்த்தனர் கீழிருந்தவர்கள். அவளிடம் ஏதோ மாற்றம் தெரிந்தது. அவள் முகம் ஒளியில் மிதப்பதைப் போலொரு பிரம்மை மேற்கொண்டது.

மக்களைப் பார்த்ததும் கைகால்களை அசைத்து ஒருவகை நாட்டியமாடினாள் இவள். இதுவரை அவர்கள் அறிந்திராதது அந்த நாட்டியம்.

"உண்மைகளை அறிந்துகொண்டேன்" என்றாள்.

"சொல்" என்றனர், சிலர் ஏளனத்துடனே.

"சொல்லொண்ணா பேரின்பம்." என்றாள்.

"பைத்தியக்காரி." என்றனர்.

"ஆமாம். அசாதாரணச் சிந்தனை கொண்டவர்கள் பைத்தியங்கள்தான்." என்றாள்.

"அவளை விடுங்கள்." பெரியவர் ஒருவர் முன்வந்தார்."உனக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. சொல் அதை எங்களுக்கும்."

"இயற்கை." என்றாள்

"விளக்கு." என்றார்.

அவளுக்குப் புரிந்ததைச் சொன்னாள். புரியாமல் விழித்தனர் மக்கள்.

"புரியச்செய்". என்றனர்.

கதைகளாகச் சொன்னாள் அவள் கண்டவைகளை.

"எப்படி நம்புவோம் உன்னை?" என்றனர்.

"நாளை பகலில் இரவு தோன்றும் பாருங்கள்." என்றாள்.

கேலி செய்தனர் அவளை. கல்லால் எறிந்து கொல்வோம் என்றனர். நாளைவரை பொறுத்திருக்கச் சொன்னார் பெரியவர்.

அந்த சூரியக் கிரகண நாளுக்குப்பின் உலகின் முதல் மதம் தோன்றியது.